நாகர்கோவில் ஜூலை 22
குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பெருமாள் நகரில் வசித்து வருபவர் ரமேஷ் செல்லசாமி 70 , இவர் புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார் . இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற கூறியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து சிகிட்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வழக்கம் போல் வேலைக்கு வந்த பெண் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரமேஷ் செல்லசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுமார் ஐந்து சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் பீரோவில் வைக்காமல் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் குப்பைதொட்டி உள்ளிட்ட இடங்களில் சாதாரணமாக வைத்திருந்த சுமார் 50 சவரன் நகைகள் திருடன் கண்ணில் படாமல் தப்பியது. இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டடு வருகின்றனர். மேலும் திருட வந்தவர்கள் முதலில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர் அதன்பின் கேமரா பதிவுகளை சேமித்து வைக்கும் டிவிஆர் பெட்டியை தூக்கி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.