ராமநாதபுரம், ஜுலை 18-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஜெட்டி பாலம் அருகே மகா சக்தி புறத்தில் அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் கடந்த சில ஆண்டுகளாக செயல்படவில்லை. இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் மீண்டும் துவக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் தமுமுகவின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் கடற்கரை பகுதியாகும். தொண்டியில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தொழிலை நம்பி தொண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பி வரும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்துவதற்கு முன்பு அரசு சார்பில் செயல்பட்டு வந்த ஐஸ் பிளான்ட் குறைந்த விலைக்கு ஐஸ்கிரீல் வாங்கி மீன்களை பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பி வைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் மகாசக்திபுரத்தில் இயங்கி வந்த அரசு ஐஸ் பிளாண்ட் மூடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் ஐஸ் வாங்க தனியார் ஐஸ் பிளான்ட் கம்பெனிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் ஐஸ் பிளாண்ட்டில் ஐஸ் கட்டிகளின் விலை அதிகமாக இருப்பதால் மீனவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மீனவர்கள் நலன் கருதி அரசு மீண்டும் மூடப்பட்ட அரசு ஐஸ் பிளான்ட் திறந்து மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.



