ஜப்பான், அக். 20:
ஜப்பானின் அய்ச்சி-நகோயா பகுதியில் நடைபெறும் 5-ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் பாராட்டு
வீராங்கனை பேபி சஹானா ரவியின் சாதனையைப் பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது சாதனையைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பேபி சஹானா ரவியின் வெற்றி, தமிழகத்தில் உள்ள இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வென்றுள்ள அவருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவு அரையிறுதியில் சீன வீராங்கனை மாவோ ஜிங்டியானை எதிர்கொண்ட பேபி சஹானா ரவி, 0–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நின்று விளையாடும் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கமாக இது குறிப்பிடப்படுகிறது.
பேபி சஹானா ரவியின் இந்தச் சாதனை, இந்திய பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. அவரது எதிர்காலப் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



