திண்டுக்கல், அக். 08
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, பெண்களின் நலன் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 15 வட்டாரங்களில் 2,039 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இம்மையங்கள் மூலம் 9,145 கர்ப்பிணித் தாய்மார்கள், 8,405 பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான 1,16,272 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் தலா 100 கர்ப்பிணிப் பெண்கள் வீதம் மொத்தம் 1,500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளையல்கள், பூ, பழங்கள் மற்றும் ஐந்து வகையான கலவை சாதங்கள் உள்ளிட்ட வளைகாப்புப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.சமுதாய வளைகாப்பு விழாவில் பயனடைந்த வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த பென்சிவர்கிஸ் மற்றும் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அபிநயா ஆகியோர், தங்களது குடும்ப சூழ்நிலையில் தனியாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது சிரமமாக இருந்த நிலையில், அரசு சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழா தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்ததாக தெரிவித்தனர்.
மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை, ஊட்டச்சத்து உணவு மற்றும் தேவையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தங்களைப் போன்ற கர்ப்பிணித் தாய்மார்களின் நலனில் அக்கறை கொண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி, வளைகாப்புப் பொருட்களை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.



