திருப்பூர், செப். 3:
உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவக்குமார் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் அவரது புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவுகள் வெளியிடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தனது நற்பெயருக்கும் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவதூறான பதிவுகள் வெளியிடப்படுவதைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.



