நாகர்கோவில், ஆக. 3 –
நாகர்கோவில் மாநகராட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வளைவு சாலை பகுதியினை சீர்படுத்தும் வகையில் அலங்கார செடிகள் நடும் பணி இன்று நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் செடிகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற உன்னதமான நோக்கத்துடன், நாகர்கோவில் மாநகராட்சியை மேலும் எழில்மிகு, தூய்மையான மற்றும் இயற்கை வளமிக்க மாநகரமாக மாற்றும் நோக்கில் விரிவான நகர்ப்புற பசுமையாக்கல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் பிரதான சாலை ஓரங்கள், பூங்காக்கள், பொது இடங்கள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் ஏரிக்கரைகளில் நிழல் தரும் மரங்கள் மற்றும் பயனுள்ள மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், மழைப்பொழிவை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நட வேண்டும்.
இத்திட்டம் வெறும் அரசு திட்டமாக மட்டும் இல்லாமல், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். இயற்கை நமக்குக் கொடுத்த ‘பசுமை நகரம்! தூய்மை நகரம்! நிலையான எதிர்காலம்!’ என்ற இலக்கை அடைய நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் அனைவரும் மாநகராட்சியுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



