கன்னியாகுமரி, ஜூலை 31 –
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆடி களப பூஜை தொடங்குகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நாளை மறுநாள் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு களப பூஜை நடைபெறும். முதல் நாள் களப் பூஜை காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கும் தங்க குடத்தில் வாசனைத் திரவியங்கள் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
களப பூஜை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நிறைவடைகிறது. தொடர்ந்து 12 நாட்கள் ஆடி களப பூஜை நடைபெறுகிறது. பதின்மூன்றாம் நாள் உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோம் பூஜையும் நடைபெறும். இதையொட்டி தினமும் காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை விஸ்வரூப தரிசனமும் பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் காலை 6 மணிக்கு தீபாராதனையும் 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை உச்சிகால பூஜையும் தீபாராதனையும் நடைபெறுகிறது.
10 மணிக்கு அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு களப அபிஷேகத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரநாராயணரூ செய்கிறார். 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜையும் பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவில் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


