ஈரோடு, ஜூலை 27 –
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் சார்பில் ‘போதையில்லா தமிழகம்’ என்ற லட்சியத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் ‘ஒயிட் பேண்ட்’ விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ராயல் K.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இப்போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியானது பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி ராஜவீதி, மஜித்வீதி, குன்னத்தூர் ரோடு, அண்ணா சிலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஜூலை மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் இந்த ‘ஒயிட் பேண்ட்’ முன்னெடுப்பின் மூலம், பங்கேற்ற அனைவரும் கைகளில் வெள்ளை பட்டை அணிந்து, இனி ஒருபோதும் போதைப்பொருளை பயன்படுத்த மாட்டோம் என்றும், குடும்பத்தையும் சமூகத்தையும் போதையின் பிடியில் இருந்து பாதுகாப்போம் என்றும் உறுதியேற்றுக் கொண்டனர். மேலும் சாமானிய மக்களின் நல்வாழ்விற்கும் ஆரோக்கியமான சமுதாய உருவாக்கத்திற்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.



