நாகர்கோவில், ஜூலை 24 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வட்டவிளை சமுதாய நலக்கூடத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கான அரசு சேவைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி, தூய்மை பணியாளர்களுடன் பேசியதாவது: தூய்மை பணியாளர்களின் பணி என்பது மிகவும் முக்கிய பணியாகும். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேவையான பல்வேறு உதவிகளை ஒரே இடத்தில் பெற இம்முகாம் வழிவகை செய்துள்ளது.
அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான உதவிகளான முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கண் கண்ணாடி தேவைகள் மற்றும் உயர்கல்விக்கான வங்கிக் கடன் வசதிகள், கட்டுமானத் தொழிலாளர் நலவாரியச் சலுகைகள் மற்றும் காப்பீட்டுச் உரிமைகோரல்கள், குடும்ப அட்டையில் புதிய பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் கூடுதல் அரிசி பெறுவதற்கான அட்டை மாற்றம் என பல்வேறு சேவைகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்ந்து உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் உரிய சிகிச்சைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு முகாமினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



