சேலம், ஜூலை 18 –
குமரி மாவட்டம் கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐ.ஆர்.ஈ.எல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க; தமிழக முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் அவசரக் கோரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட 8 கடலோரக் கிராமங்களில் பெரும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஐ.ஆர்.ஈ.எல் நிறுவனத்தின் அணுக்கனிம மணல் அள்ளும் திட்டத்திற்கான கால நீட்டிப்பை ரத்து செய்து, ஒட்டுமொத்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலரும், ஊடக ஆளுமையுமான சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் விடுத்துள்ள விரிவான அறிக்கையில் வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”கன்னியாகுமரி மாவட்டத்தின் கீழ்மிடாலம், மிடாலம், இணையம் புத்தன்துறை , ஏழுதேசம், கொல்லங்கோடு உள்ளிட்ட 8 கடலோரக் கிராமங்களில், சுமார் 1000ஏக்கர் மேல் பரப்பளவில் அணுக்கனிம மணல் சுரங்கம் அமைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த பொதுமக்களையும், கடலோர மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மணல் அள்ளும் பணிகளால், கடல் அரிப்பு தீவிரமடைந்து கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து வருகிறது. நிலத்தடி நீர் முற்றிலுமாக உவர்ப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், தென்னை விவசாயமும், கடலோர மீன்வளமும் அழிவின் விளிம்பிற்குச் சென்றுள்ளன. மேலும், இல்மனைட், ரூடைல், ஜிர்கான், மோனசைட் போன்ற கதிர்வீச்சுத் தன்மை கொண்ட அணுக்கனிமங்களை மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே வெட்டி எடுப்பதால், அப்பகுதி மக்களிடையே புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
லட்சக்கணக்கான மீனவ மற்றும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தத் திட்டத்தை மக்களின் நலன் கருதி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் கூட பொதுமக்களின் பலத்த எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்ட நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக இந்த நச்சுத் திட்டத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
மக்களின் முதல்வராகத் திகழும் தமிழக முதல்வர், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, மக்களின் உணர்வுகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் மதிப்பளித்து, இந்தத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



