அரியலூர், ஜூன்:13
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நேற்று கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானதில் வட்டார கல்வி அலுவலர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 40 பயணிகளுடன் இரும்புலிக்குறிச்சி கிராமத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று புதன்கிழமை முற்பகல் புறப்பட்டது. பேருந்தை கல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கைலாசம் மகன் முருகானந்தம்(48) ஓட்டினார். நடத்துநராக ஓட்டகோவிலைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அறிவழகன்(53) பணியில் இருந்தார்.
பேருந்து, செந்துறை அடுத்த இராயம்புரம் அருகே சென்ற போது திடீரென பசுமாட்டு கன்றுக் குட்டி ஒன்று குறுக்கே வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் கன்றுக் குட்டி மீது மோதாமல் இருக்க பேருந்தை இடது பக்கம் திருப்புகையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மின் கம்பத்தில் மீது மோதி, அங்குள்ள பள்ளத்தில் இறங்கியது.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதை அறிந்த அப்பகுதி மக்கள், செந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பேருந்தினுள் காயங்களுடன் சிக்கியிருந்த செந்துறை வட்டார கல்வி அலுவலர் உமையாள்(58), அரியலூர் ஜெ.ஜெ நகரைச் சேர்ந்த முருகன் மனைவி வெண்ணிலா, ஓ.கூத்தூர் செல்வகுமார் மனைவி யுவஸ்ரீ, அரியலூர் வீரப்பிள்ளை மனைவி விஜயா(60), சிறுகடம்பூர் சதீஷ்குமார் மனைவி சாரதி(21), கொடுக்கூர் மேலத்தெருவைச் சேர்ந்த கண்ணன் மகள் சுதா(43), செந்துறை பரமசிவம் நகரை ராமலிங்கம்(77), பொய்யாதநல்லூர் அழகுமுத்து மகன் கந்தசாமி(43), பெருமாள்சாவடி காலனித் தெருவைச் சேர்ந்த தனக்குடி(60), குன்னம், அண்ணாநகரைச் சேர்ந்த பாலு மனைவி மேகலா(42), நாகல்குழியைச் சேர்ந்த நீலமேகம் மனைவி சகுந்தலா(45) உள்பட 12 பேரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.