சேலம், ஜூலை 3 –
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 2026 – 27 ஆம் கல்வி ஆண்டிற்கான பல்வேறு செவிலியர், மருந்தாளுநர், துணை மருத்துவ படிப்புகளான பட்டப் படிப்பு, பட்டைய படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு தகுதியான மாணவ மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் பி.எஸ். சி செவிலியர், பி ஃபார்ம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், கதிரியக்கவியல், டயாலிசிஸ் தொழில்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்பம் போன்ற வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் ஆகும்.
இந்த மாணவ, மாணவியர் சேர்கையானது மருத்துவ கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் தேர்வு குழுவின் மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் கலந்தாய்வு மூலம் முற்றிலும் மதிப்பெண் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின்படி நடைபெறும். இதற்கு கல்வி தகுதி மேல்நிலைத் தேர்வில் 12 -ஆம் வகுப்பில் தகுதியான அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்பிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு வாரியான விரிவான தகுதி வாய்ப்புகள் மற்றும் வரம்பு விபரங்கள் அதிகாரப்பூர்வ தொகுப்பில் கிடைக்கும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 7.7.2026 மாலை 5 மணி வரை ஆகும். பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.07.2026 மாலை 5 மணி வரை ஆகும்.
அரசு நிறுவனங்களில் இதற்கான கட்டணம் மிகவும் குறைவாகும். குறிப்பாக செவிலியர் மற்றும் தாதியர் பட்டய படிப்பிற்கு கட்டணம் ஏதுமில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி தேவைப்படும் மாணவ மாணவியர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் அல்லது மாவட்ட உதவி மைய தொலைபேசி எண் 97514 56001 இதில் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம்.
தகுதியுடைய மாணாக்கர்கள் குறிப்பாக ஊரக பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் இத்துறையில் உள்ள சிறந்த வேலை வாய்ப்புகளை பெற இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


