திருவட்டார், ஜூன் 22 –
திருவட்டாறு அருகே ஆற்றூர் சந்திப்பில் கடந்த 2 வாரங்களாக செயல்படாமல் இருக்கும் தேசிய வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து த.வெ.க. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி குமரி மத்தியமாவட்ட அமைப்பாளார் முன்னாள் ராணுவ வீரர் அகஸ்டின் கூறியதாவது: திருவட்டாறு தாலுகாவில் முக்கியமான வளர்ந்து வரும் நகரம் ஆற்றூர் ஆகும். இங்கு அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளிகள், தமிழ்நாட்டின் முதல் தனியார் கல்வியியல் கல்லூரி, தனியார் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத, பிசியோதெரபி மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி, உடற்பயிற்சி கூடங்கள், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், மருந்துக்கடைகள், இரும்பு வணிகக்கடைகள், ஹோட்டல்கள், இ-சேவை மையங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் துவங்கும் காலை நேரம் மற்றும் மாலை நேரங்களில் ஆற்றூர் சந்திப்பில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். ஆற்றூர் சந்திப்பில் பல ஆண்டுகளாக தேசிய வங்கியின் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வந்தது. மக்கள் பணம் பெறவும், வங்கியில் பணம் செலுத்துவதற்கு இந்த இயந்தியரம் மிகவும் உதவிகரமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரகாலமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம். இயந்திர அறை பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்து திருவட்டாருக்கும், 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து மார்த்தாண்டத்துக்கும் சென்று ஏடிஎம்.ல் பணம் எடுக்க வேண்டியுள்ளது.
இந்த இயந்திரம் செயல்படாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கும் கோரிக்கை அளித்துள்ளேன். என்று கூறினார்.



