நாகர்கோவில், ஜூன் 6 –
கன்னியாகுமரி முதல் கேரளா எல்லை பகுதியான செங்காவிளை, காரோடு வரையிலான நான்கு வழி சாலை 66 கிமீ தொலைவில் 93 பாலங்களுடன் அமைக்கும் பணி 2003ம் ஆண்டு தொடங்கி பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் சீரமைக்கும் பணிக்கு போதிய மண் கிடைக்காமல் காலதாமதம் ஆகிக் கொண்டே சென்றது. இதை அடுத்து பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இதை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மண் கொண்டுவரப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலை பணியினை துரிதப்படுத்த கேட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தற்போது நான்கு வழி சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோயிவிலை அடுத்த புத்தேரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் தோட்டியோடு, கல்குறிச்சி, பள்ளியாடி, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சாலையை தொட்டு அமைந்துள்ள பொதுமக்களிடம் சாலை மற்றும் பாலங்கள் குறித்து குறைகள் கேட்டு தெரிந்ததோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதிகாரிகளிம் சாலை மற்றும் பால பணிகளை விரைந்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருடன் நான்கு வழி சாலை நகாய் திட்ட இயக்குனர் சஜின் குமார், திட்ட மேலாளர் ஜெய்சங்கர், திட்ட இயக்குனர் உதவியாளர் சிவா, காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.



