தேனி, ஜூன் 3 –
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் பகுதியில் சிறப்பு தூர்வாரும் திட்டம் (2026-2027) கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மந்தைக்குளம் கண்மாய் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. வைத்திநாதன் 02.06.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வாய்க்காலில் தேங்கியுள்ள மணல், சகதி மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தூர்வாரும் பணிகள் தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மழைக்காலங்களில் கண்மாய்களுக்கு நீர்வரத்து தடையின்றி கிடைக்கவும், நீர்நிலைகளின் நீர்த்தேக்க திறன் அதிகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இத்திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாய பயன்பாட்டிற்கான நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து பணிகளும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.



