நாகர்கோவில், ஜுன் 1 –
குமரி மாவட்டத்தின் 54வது கலெக்டராக பிரதாப் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்து கூறியதாவது: தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி இயற்கையில் எழில் சூழ்ந்த மாவட்டமாகும். இங்கு கலெக்டராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டம் மக்கள் படிப்பறிவில் மிகவும் முன்னேறியவர்கள். கலெக்டர் அலுவலகம் முதல் எந்த அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்தாலும் அவர்கள் கண்ணியமான நடத்தப்பட வேண்டும். அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் அளவில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் அதிமாக உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் மாவட்டம் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல அனுபவம் தரும் வகையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் அந்த வகையில் துறைச்சார்ந்த அலுவலகர்களுடன் கலந்து பேசி முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் மீனவர்கள் அதிகம் கொண்ட மாவட்டம் என்பதால் அவர்கள் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த நல்ல திட்டங்களை அவர்களுடன் ஒருங்கிணைந்து அரசுக்கு பரிந்துரை செய்து அவர்கள் தேவைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும். விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பணிகள் செய்யும் மக்களின் தேவைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு தெரியப்படுத்தி நிறைவேற்றப்படும். மாவட்டத்தின் முக்கிய கட்டமைப்பு பணிகளான சாலைகள் மேம்பாலங்கள் போன்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும்.
இதேபோல், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பணிகளைச் செய்யும் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் நம்முடைய மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசுக்குப் பரிந்துரை செய்து, அந்தப் பணிகளும் விரைவாக நிறைவேற்றப்படும்.
குமரி மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் இங்குள்ள பொதுமக்கள் அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டு, அதற்கேற்பப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏனெனில், பணிகளை முன்னெடுப்பது என் தனிப்பட்ட நோக்கம் மட்டுமல்ல. மாவட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் அனைத்துப் பிரதிநிதிகளும் இணைந்து எந்தெந்தப் பணிகளை முன்னிறுத்தச் சொல்கிறார்களோ, அதற்கேற்ப இந்த மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு, தமிழ்நாடு அளவில் கன்னியாகுமரி மாவட்டம் அனைத்துத் துறைகளிலும் மிகவும் வளர்ச்சி அடைந்த மாவட்டமாகத் திகழவும், மேலும் சிறந்த பல வளர்ச்சிகளைப் பெற்று முதன்மை இடத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் நம் மாவட்ட நிர்வாகம் செயல்படும். மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கும் பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



