கன்னியாகுமரி, ஜன. 13 –
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டில் பாலம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் தினசரி சென்று பார்த்து வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 சுற்றுலா படகுகள் தினசரி இயக்கப்படுகின்றன.
தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமாக சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சர்வதேச சுற்றுலா மையத்தில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் 3 மணி நேரம் கூடுதலாக இயக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவித்து உள்ளது. இந்த மூன்று நாட்களும் காலை காலை 8 மணிக்கு தொடங்கும் சுற்றுலா படகுகள் இயக்கம் காலை 6 க்கு தொடங்கும் என்றும் மாலை 4 மணிக்கு முடியும் படகு இயக்கம் மாலை 5 வரை நீட்டிக்கபட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என்பதால் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது.



