திங்கள்சந்தை, ஜன. 7 –
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் அவரை அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும் என பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லுக்குறி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியவர் பிரதாபன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு வில்லுக்குறி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை மீண்டும் வில்லுக்குறி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பேரூராட்சி தலைவி விஜயலெட்சுமி தலைமையில் நேற்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் துணைத் தலைவர் ராமலிங்கம் முன்னிலையில், கவுன்சிலர்கள் சரிதா, சுதா, தேவிகா, புஷ்பாகரன், வினோத், எட்வர்ட் திலக், சுகிதா, ஆன்சிலா விஜிலியஸ், ரீனா, சுப்பிரமணியபிள்ளை, ஸ்டான்லி, கிரிஜாம்பிகா, நியமன உறுப்பினர் ஜோசப் பிராங்கிளின் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி கூறியதாவது: வில்லுக்குறி பேரூராட்சியில் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்டு வந்தவர் செயல் அலுவலர் பிரதாபன். அப்போது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சரல்விளையில் உள்ள 4 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ஆகியோரிடம் இருந்து கடிதம் வந்தது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், கல்குளம் வட்டாட்சியர், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர், மின்வாரிய அலுவலர், ஆர்ஐ, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு உரிய கடிதம் அனுப்பி 4 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் இரணியல் இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புடன், மின்வாரிய அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் முன்னிலையில் நடந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றியபோது கல்குளம் தாசில்தார், ஆர்ஐ, கிராம நிர்வாக அதிகாரி ஆகிய வருவாய்த்துறை அதிகாரிகள் வரவில்லை. அவர்கள் ஏன் வரவில்லை என்பது குறித்து தெரியாது. அதற்கு அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நிலையில் தவறு ஏதும் செய்யாத வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் பிரதாபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் பொறுப்பேற்ற பிறகுதான் வில்லுக்குறி பேரூராட்சி 15 வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எனவே நிர்வாக நலன் கருதி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகிய எங்களுக்காக மீண்டும் செயல் அலுவலர் பிரதாபனை வில்லுக்குறி பேரூராட்சியில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் அறிந்து வந்த பிரின்ஸ் எம்எல்ஏ போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். செயல் அலுவலர் பிரதாபனை மீண்டும் நியமனம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் தரப்பில் யாரும் வராததால் இரவும் போராட்டம் தொடர்ந்தது. கவுன்சிலர்களின் உறவினர்கள் பொதுமக்களின் என ஏராளமானோர் அங்கு குவிந்தனர். கவுன்சிலர்கள் அனைவரும் இரவு பாயை விரித்து அங்கேயே படுத்து தூங்கி விட்டனர். விடிய விடிய நடந்த இந்த போராட்டம் இன்று காலையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.
போராட்டம் குறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது: உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி நேர்மையாக நடந்து கொண்ட செயல் அலுவலரை பழி வாங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவரை மீண்டும் இங்கு செயல் அலுவலராக பணியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி பாஜக, திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் நியமன உறுப்பினர் என 15 கவுன்சிலர்கள் கலந்து கொண்டுள்ளோம். ஒரு பெண் கவுன்சிலர் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அங்கிருந்தே அவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பொறுப்பு செயல் அலுவலரை தவிர எந்த அதிகாரிகளும் இதுவரை எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை. உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கையை நிறை வேற்றி தர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் தொடரும் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சரல்விளையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்து இடித்து அப்புறப்படுத்தப்பட்ட குடிசைகள் இருந்த அதே இடத்தில் மீண்டும் 4 குடிசைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதிகாரிகள் உத்தரவின் பேரில் இந்த பணிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



