நாகர்கோவில், ஜன. 5 –
குமரி மாவட்டத்தில் மொத்தம் 110 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 80 டாஸ்மாக் கடைகளில் பார் வசதி உள்ளது. இந்த பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால் சில பார்களில் விதிமுறைகளை மீறி கூடுதலாக பாராக மாற்றி செயல்படுவதாக புகார் எழுந்தன.
இதையடுத்து மாவட்ட எஸ் பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேற்று நாகர்கோவில் டாஸ்மாக் பார்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கோட்டாறு பகுதியில் மட்டும் 5 இடங்களில் விதிமுறைகளை மீறி மதுபான பார் அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து கேபிஆர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் நடத்திய நாகர்கோவில் ஏசுவழியான் தெருவை சேர்ந்த ஜான் டி ராஜன் (55), கோட்டா ரயில்வே ரோட்டில் பார் நடத்திய வடக்கு ரத வீதியை சேர்ந்த மாதவன் (49), மீனாட்சிபுரம் டாஸ்மாக் கடையில் பார் நடத்திய வணிகர் தெருவை சேர்ந்த சுஜிகுமார் (49), கோட்டார் சந்திப்பு பகுதியில் பார் நடத்திய வைத்தியநாதபுரம் கணேஷ் (37), ஆயுதப்படை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்திய விக்னேஷ் (35) உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


