நாகர்கோவில், ஜன. 5 –
அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட புத்தேரி பகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று குடிமைப்பொருட்கள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்குட்பட்ட 65 வயதுக்கு மேற்பட்ட முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறன் பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட புத்தேரி பகுதியில் 65 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதியோர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பயனாளிகளை நேரில் சந்தித்து, திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் மின்னணு எடைத்தராசு, e Pos இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்து சென்று தகுதியுள்ள பயனாளர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.



