களியக்காவிளை, டிச. 27 –
கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோட்டையம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கேரளா மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்ட எல்லை படந்தாலு முடு செக் போஸ்டில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று துவங்கப்பட்ட இந்த முகாம் அரசின் அறிவிப்பு வரும் வரையில் முகாம் தொடர்ந்து செயல்படும்.
இந்த முகாமில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் இறச்சி கோழி வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் காலி வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள், களியக்காவிளை பேரூராட்சி பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி புரிந்து வருகின்றனர்.



