நாகர்கோவில், டிசம்பர் 8 –
சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி பேராயத்தின் 7வது பேராயர் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் அருட்திரு செல்வமணி கிறிஸ்டோபர் விஜயன் அதிக வாக்குகள் பெற்று பேராயராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய பேராயர் அருட்பொழிவு மற்றும் பதவியேற்பு விழா நேற்று மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா ஆலயத்தில் நடைபெற்றது.
சென்னை பேராயர் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் அருளுரை வழங்கினார். கன்னியாகுமரி பொறுப்பு பேராயர் ராயிஸ் மனோஜ் விக்டர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேராயர் எஸ். கிறிஸ்டோபர் விஜயனை அறிமுகப்படுத்தினார். உப தலைவர் முத்துசாமி கிறிஸ்துதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவிற்கு தென்னிந்திய திருச்சபை பொது செயலாளர் பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமை தாங்கி புதிய பேராயர் எஸ். கிறிஸ்டோபர் விஜயனை பேரருள்பொழிவு செய்து ஆயருக்கான திருக்கோல் வழங்கி திருநிலைப்படுத்தினார். தொடர்ந்து புதிய பேராயரிடம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி பேராயத்தின் செயலாளர் பைஜூ நிசித் பால் புதிய பேராயருக்கு தென்னிந்திய திருச்சபை சட்ட புத்தகங்களை வழங்கினார்.
விழாவில் புதிய பேராயர் எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பேசியதாவது: தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயத்தின் 7-வது பேராயராக தேர்வு செய்யப்பட்டேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதுடன் மக்களின் அன்பையும் உணர்கிறேன். எனது முக்கிய குறிக்கோள் ‘சர்வ் தி லீஸ்ட்’ என்பது போல் விளிம்பு நிலையில் வாழ்வோருக்கு தொண்டாற்றிட உறுதி வழங்கி முன்மொழிகிறேன். நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேராயத்தின் பொருளாளர் ஜெயகர் ஜோசப், ஞாறாம் விளை சி.எஸ்.ஐ. சபை செயலாளரும், இம்மானுவேல் அரசர் கல்விக்குழும தலைவருமான டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர், கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. மறைமாவட்ட கூட்டு மேலாண்மை பள்ளிகளின் மேலாளர் சுபானந்தாராஜ், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் நெல்சன், நேசமணி கிறிஸ்தவ கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் பிரவின், மருத்துவ மிஷன் மேலதிகாரி ராஜேஷ் சத்தியா கிறிஸ்டியன், காலேஜ் ஆப் பிசியோதெரபி தாளாளர் கிங்சிலி கோல்ட்வின், முதல்வர் பேசில் ஜெபசிலின் துரை, சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி தாளாளர் அஜெய் ஆனந்த், நெய்யூர் கிறிஸ்டியன் காலேஜ் ஆப் நர்சிங் தாளாளர் டிசோர் ஜெயானந், சி.எஸ்.ஐ. மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் அருளானந்த், சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளி தாளாளர் பிரான்சிஸ், மாடரேட்டர் பள்ளி தாளாளர் செல்வன், கிறிஸ்டியன் காலேஜ் ஆப் கல்வியியல் கல்லூரி தாளாளர் ஜஸ்டின் ஜாஸ்பர் தாஸ், களியக்காவிளை சி.எஸ்.ஐ. ஐ.டி.ஐ. தாளாளர் தனேஷ், மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் சதீஷ், முதல்வர் அனில் குமார் மற்றும் சேகர ஆயர்கள், திருப்பணியாளர்கள், பேராய நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள், இறைமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை, வாழ்த்து கூட்டம் போன்றவை நடந்தன. முன்னதாக அமைச்சர், எம்.பி,எம்.எல்.ஏ.க்கள் புதிய பேராயரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



