கன்னியாகுமரி, டிச. 4 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தீப திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் வீதி உலா வரும் நிகழ்வில் கிழக்கு வாசல் பகுதியில் வந்த போது கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதன் பின் கோவில் இருந்து வெளியே புறப்பட்ட அம்மன் வாகனம் சன்னதி தெரு வழியாக கன்னியம்பலம் மண்டபத்துக்கு சென்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக பகவதி அம்மன் வாகன உள்ளே சென்று வடக்கு வாசல் வழியாக வெளியே வந்து வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் வாகனம் வரும்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.
இரவு 11 மணிக்கு மீண்டும் கன்னியம்பலம் மண்டபத்துக்கு அம்மன் வந்து மண்டபத்தின் முன்புள்ள சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 11.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நடந்தது. இதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்தார்.
பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு அத்தாழ பூஜை மற்றும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் கன்னியாகுமரி கோவில் மேலாளர் ஆனந்த் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



