தென் தாமரைகுளம், அக். 27 –
லெமூரியா தமிழ் இலக்கிய மன்றம் முன்னெடுப்பில், சாமிதோப்பு அன்பு வனத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பங்கேற்றார்.
இதில் அவர் பேசியதாவது: தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார் அவர்களின் தலைமையில் தமிழ்த்துறை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், குமரி மண்ணின் ஆகச் சிறந்த எழுத்தாளர்கள், திரைத்துறையினர் , இலக்கிய ஆர்வலர்கள் என பல்வேறு ஆளுமைகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்றைய நாளை வெகுசிறப்பானதாக்கியது. பேசிய அனைவரது கருத்துச்செறிவான உரைகளும் நிகழ்வை ஒரு ஒரு பயிலரங்கம் போல உணரச்செய்தது.
அரசியலும் – இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றினேன், தமிழ் மொழியின் வரலாற்றிற்கும் செழுமைக்கும் குமரி மண்ணினுடைய இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்பு, அரசியல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதிலும் விமர்சனபூர்வமாக அரசியலை அணுகுவதிலும் இலக்கியத்தின் பங்கு எவ்வாறானதாக இருக்க வேண்டும் போன்ற கருத்துகளையும் நாம் தமிழர் கட்சி சார்பில் நம் வரலாறு , மெய்யியல் சார்ந்த முன்னெடுப்புகளை எவ்வாறு முன்னெடுத்துச் கொண்டிருக்கிறோம், என்பதுபற்றிய விளக்கத்தையும் சான்றோர் நிறைந்த அவையில் பகிர்ந்து கொண்டேன்.
குமரி மண் தமிழினத்தின் வரலாறு, மெய்யியல், இலக்கியம், பண்பாடு என அனைத்து கூறுகளிலும் செறிவு மிக்க மண். அதை உணர்ந்து தான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் மெய்யியல் தலைநகராக அறிவிக்கப்படும் என்ற புரட்சிகரமான கொள்கை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து செயல்படும் நாங்கள் இம்மண்ணிலிருந்து வரலாறு , மெய்யியல் இலக்கியம் சார்ந்து லெமூரியா தமிழ் இலக்கிய மன்றம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருப்போம் என்ற உறுதியளித்திருக்கிறேன்.
தொடர்ந்து இயங்குவோம். பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என பேசினார்.



