ராமநாதபுரம், டிச. 7-
தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் நகராட்சி துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், வருவாய்த்துறை, மகளிர் திட்டம் துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் துவக்கி வைத்ததை ஒட்டி ராமநாதபுரம் மாவட்ட பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார். பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்:
அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை துவங்கி வைத்து பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்ததை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 991 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கொடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக பின் தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தில் மாற்றம் காணச் செய்த தலைவர்களில் மகத்தான தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் இருந்து வருகிறார். அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர் ஆவார். அந்த தலைவரை போற்றும் நிகழ்வாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் முழு உருவச் சிலை அமைத்து பெருமைப்படுத்தியது மட்டுமின்றி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது.
அதேபோல் அந்த வழியில் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களைத் தந்து பொருளாதார முன்னேற்றத்தில் சரிநிகர் சமநிலை பெறும் வகையில் இந்தத் திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி அனைத்து முதல்வர்களுக்கும் முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருகிறார் நமது முதலமைச்சர். எனவே அரசு வழங்கக்கூடிய இத்தகைய திட்டங்களை தகுதியுடைய பயனாளிகள் பெற்று பயன் பெற்றிட வேண்டும்
இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி தூய்மை பணியாளர்களுக்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் கலந்து கொண்டு உணவு அருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து, மாவட்டத் தொழில் மையம் மேலாளர் திரிபுரசுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.