ஆப்கானிஸ்தான்: அக்.23.
உருஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த 57 வயதான முகமது சாதிக், நான்கு மனைவிகள் மூலம் 58 குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ளார். குழந்தைகளின் பெயர்களைக்கூட சில நேரங்களில் மறந்துவிடுவதாகவும், இரவில் அனைவரும் வீட்டில் இருக்கிறார்களா என எண்ணிப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தைப் பராமரிப்பதில் சவால்!
கார் விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் முகமது சாதிக்குக்குக் கிடைக்கும் வருமானம், குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. உணவுத் தட்டுப்பாடு காரணமாகச் சில நேரங்களில் குழந்தைகள் பசியுடன் உறங்கும் நிலையும் ஏற்படுகிறது. குடும்பச் செலவுகளைச் சமாளிக்க அவரது குழந்தைகள் சிலரும் மறுசுழற்சிப் பொருட்களைச் சேகரித்து வேலை செய்கின்றனர்.
இளம் வயதில் திருமணம்
முகமது சாதிக்கின் நான்கு மனைவிகளுக்கும் திருமணத்தின்போது 13 முதல் 16 வயதுக்குள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் இதுவரை 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியான கர்ப்பங்கள், பிரசவங்கள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத சூழல் குடும்பத்துக்குக் கூடுதல் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
அடிப்படை வசதிகளும் குறைவு
குடும்பத்தினர் நெருக்கடியான வீட்டில் வசித்து வருகின்றனர். போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், குளிரான இரவுகளில் ஆறு அல்லது ஏழு பேர் ஒரே போர்வையைப் பயன்படுத்தி உறங்குகின்றனர். குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் அன்றாட உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்வது முகமது சாதிக்குக்குப் பெரும் போராட்டமாக உள்ளது.
தந்தையின் இரண்டு ஆசைகள்!
தனது குழந்தைகள் அனைவரும் கல்வி கற்று அறிவைப் பெற வேண்டும் என்றும், யாரும் பசியுடன் உறங்கக்கூடாது என்றும் முகமது சாதிக் தெரிவித்துள்ளார். குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு மற்றும் உதவி அமைப்புகளிடம் ஆதரவும் கோரியுள்ளார்.



