நாகர்கோவில் அக் 27
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் எடுத்த முயற்சியின் பயனாக அகஸ்தீஸ்வரம் தாலுகா சரவணந்தேரி கிராமத்தில் திருட்டு போன 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் விநாயகர் சிலை காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது. இதற்காக தளவாய்சுந்தரத்திற்கு சரவணந்தேரி ஊர் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
இது குறித்த விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகா, சரவணந்தேரி கிராமத்தில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் ஊர் குளத்தன்கரை அருகில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு சுற்று வட்டார மக்கள் மற்றும் அவ்வூர் பொதுமக்கள் வந்து இறை வழிபாடு செய்து வந்தனர். இத்திருக்கோவிலில் 22-10-2024 செவ்வாய்கிழமை இரவு வரை ஆலயத்தில் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் இருந்தது. 23-10-2024, புதன்கிழமை அதிகாலை 6 மணி அளவில் பார்க்கும் போது இத்திருக்கோவிலில் இருந்த விநாயகர் மூலவர் விக்ரமும், முஷிக வாகன விக்ரமும் காணாமல் போய் இருந்தது. கோவில் பூட்டை உடைத்து திருடர்கள் திருடி சென்றிருந்தனர்.
தகவல் அறிந்த தளவாய்சுந்தரம் எம் எல் ஏ சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து, காவல்துறை அலுவலர்களுடன் தொலைபேசியில் பேசி திருடியவர்களை கண்டுபிடித்து, திருட்டு போன சிலைகளை மீட்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இது குறித்து சரவணந்தேரி அருள்மிகு கோகுல விநாயகர் திருக்கோவில் சார்பில் தென்தாமரைகுளம் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து திருடியவர்களை கண்டுபிடித்து திருட்டு போன சிலைகளை மீட்டுள்ளனர். இச்சிலைகள் இத்திருக்கோவிலில் மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. திருட்டு போன சிலைகளை மீட்பதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட தளவாய்சுந்தரத்திற்கு ஊர் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.