ஊர்வலப் பாதைகளை டிஐஜி, எஸ்பி ஆய்வு
நாகர்கோவில், செப்.14:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளதாகவும், அவற்றை போலீசார் கணக்கெடுத்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் வருகிற 19, 20-ம் தேதிகளில் பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இந்து மகா சபா சார்பில் வைக்கப்படும் சிலைகள் 19-ம் தேதி சொத்தவிளையிலும், சிவசேனா சார்பில் வைக்கப்படும் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பிலான சிலைகள் 20-ம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலை கரைப்பு நடைபெறும் முக்கிய கடலோரப் பகுதிகளான மணவாளக்குறிச்சி, மிடாலம், தேங்காப்பட்டணம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் டிஐஜி திருநாவுக்கரசு மற்றும் குமரி மாவட்ட எஸ்பி அன்சுல் நாகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் பாதைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் கடலோரப் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



