இராமநாதபுரம் செப் 30-
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் மற்றும் கடலாடி தாலுகா அலுவலக ஓட்டுநர் சத்தியநாதன் ஆகியோரை லஞ்சம் பெற்றதற்காக இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன் (வயது 35) என்பவர் தனது தந்தையின் பெயரில் ஆப்பனூர் பெரிய கண்மாயிலிருந்து வண்டல்/சவடு மண் எடுத்துச்செல்வதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்திருந்தார். அதன்பேரில் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று மண் அள்ள அனுமதி கேட்பதற்காக ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் (வயது-40) என்பவரை சந்தித்து விபரம் கேட்க, அவரும் அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரின் வாகன ஓட்டுனர் சத்தியநாதன் (வயது-45) ஆகிய இருவரும் மேற்படி கண்மாயில் இருந்து மண் எடுத்து செல்ல அனுமதி ஆணை வாங்கி தருவதற்கு தங்களுக்கும் தாசில்தாருக்கும் சேர்த்து லஞ்சமாக ரூ.4,000/- வேண்டுமென்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தார் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரில் ரசாயனம் தடவப்பட்ட பணம் ரூ.4,000/-த்தை கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சத்தியநாதன் என்பவர் நேற்று மாலை கேட்டுப்பெற்ற
போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்படி சத்தியநாதனை கைது செய்ய முயன்றது போது இரசாயணம் தடவிய லஞ்சப்பணத்துடன் தப்பி ஓடிவிட்டார். எனினும் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று அதிகாலை 3 மணியளவில் அவரை தேடிப்பிடித்து உரிய விசாரணைக்கு பின்பு கைது செய்தனர். அதனை தொடர்ந்து இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.