கன்னியாகுமரி, நவ.6:
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வந்த வாகனம் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது. இதனால் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ மற்றும் செயல் அலுவலர் உஷா கிரேஸி ஆகியோரிடம் புதிய வாகனம் வாங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய டிப்பர் வாகனம் வாங்கப்பட்டு அதை பேரூராட்சியின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அஞ்சுகிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா கிரேஸி தலைமையில், துணைத் தலைவர் காந்தி முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ புதிய டிப்பர் வாகனத்தை இயக்கி பேரூராட்சி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த நிகழ்வில், அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர்கள் இராஜபாண்டியன், ஜோஸ் திவாகர், வீடியோகுமார், காமாட்சி, ஜெயந்தி நாராயணன் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.