திருவட்டார், ஆக. 25 –
குமரி மேற்கு மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பூத் நிர்வாகிகள் பட்டியல் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்து கொண்டு பூத் நிர்வாகிகள் பட்டியலை ஆய்வு செய்தார்.
மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை பேசியது: அதிமுக கட்சி தொடங்கிய உடன் எம்ஜிஆர் முதல்வராக வரவில்லை. பொது மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி மக்கள் தொண்டாற்றிய பிறகு தான் முதல்வராக வந்தார். தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக ஏகப்பட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜெயலலிதா அந்த கட்சியை கட்டு கோப்பாக கட்டி காத்து இராணுவ கட்டு கோப்புடன் செயல்பட வைத்தார்.
கட்சியில் கொள்கைபரப்பு செயலாராக பதவி ஏற்று மக்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி தமிழக முதல்வராக பதவி ஏற்று தமிழக நலனுக்காக பல சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். காவேரி நதி நீர் பிரச்சனைக்காக கடுமையாக பல போராட்டங்களை நடத்தி காவேரி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். சமூக நீதிக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து பல தரப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கட்சியை யார் வழி நடத்துவார் என்ற நிலை வந்தபோது அந்த கட்சியை தொண்டர்கள் ஆதரவுடன் தலைமை தாங்கி மிக சிறப்பாக வழிநடத்தி வருபவர் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக முதல்வராக இருந்த போது நீட் தேர்வு மூலம் டாக்டர் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். அப்போது அந்த கோப்பில் கையெழுத்து போட கவர்னர் மறுப்பு தெரிவித்து விட்டார். ஆனால் முதல்வரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதை சட்டம் ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இன்று கட்சி ஆரம்பித்த உடனே தமிழக முதல்வராக வரவேண்டும் மக்கள் பிரச்சனைக்காக எந்தவித போராட்டமும் நடத்தாமல் ஏசி அறையில் இருந்து கொண்டு யாரோ ஒருவர் எழுதி கொடுப்பதை படித்து அறிக்கை மட்டும் வெளியிட்டு கொண்டிருக்கிறார் ஒருவர். அவருக்கு அதிமுக கட்சியை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை.
தமிழகத்தில் 2026 -ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி. தவெக எங்கள் பக்கம் வரவே முடியாது. 2026ம் ஆண்டு அதிமுக கூட்டனி அதிக இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பார். இவ்வாறு பேசினார். உண்ணாமலை கடை பேரூர் செயலாளர் ஷாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மனோ, சுமன், ஷாஜின் கண்ணன், டேனியல், விஜயகுமார், திருவட்டார் ஒன்றிய துணை செயலாளர் ஜெயதாஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் செந்தமிழ்வாசன், திருவட்டார் பணிமனை செயலாளர் சதீஷ், கருங்கல் பேரூர் செயலாளர் வினோத் டேனியல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



