கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்
புதிய வீடுகள் கட்டுவதற்கு
2 ஆயிரம் பயனாளிகள் தேர்வு
அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் நாகர்கோவில், மே11:
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் தோவாளை, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் கட்டி முடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு திறவுகோல் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அழகுமீனா தலைமையில் செண்பகராமன் புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:
குடிசை இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டின்படி 2024 – 25ம் நிதியாண்டில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு ரூ ரூ. 3.50 இலட்சம் என்ற மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ. 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 1790 வீடுகளுக்கு ரூ. 55.64 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் இது நாள் வரை 1374 வீடுகள் ரூ. 48.09 கோடி மதிப்பில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 416 வீடுகள் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். 2025 – 26ம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 ஆயிரம் வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் நாளது தேதி வரை 1974 வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் இலவச மனைபட்டா வழங்கப்பட்ட மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 257 பயனாளிகளும் அடங்குவர்.
இன்றைய நிகழ்வில் தோவாளை ஊராட்சிக்குட்பட்ட 20 பயனாளிகளுக்கு திறவுகோல், 30 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை, அகஸ்தீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட 25 பயனாளிகளுக்கும், ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 25 பயனாளிகளுக்கும் வேலை உத்தரவு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வேலை உத்தரவு பணி ஆணை பெறப்பட்ட அனைவரும் உடனடியாக பணிகளை தொடங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி துறை செயற்பொறியாளர், பொறியாளர்கள், பயனாளிகள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், உதவி திட்ட அலுவலர், செயற்பொறியாளர் ஜான் சுகிர்தராஜ், உதவி செயற்பொறியாளர்கள், பயனாளிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.