கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் i2K என்ற சமூக அமைப்பினர் ஒன்றிணைந்து, காடுகளை காக்கும் பொருட்டும், போச்சம்பள்ளி மக்களின் ஆரோக்கியத்தை பேணி காக்கும் பொருட்டு, மாராத்தான் போட்டி நடத்தினர். இன்று காலை சுமார் 6 மணியளவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கொடியசைத்து மாராத்தான் போட்டியை துவக்கி வைத்தார். 11 வயது முதல் 55 வயது வரை உள்ள 1782 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனர். இதில் 21 கி.மீ. தூரம், 10.கி.மீ. தூரம் மற்றும் 5கி.மீ. தூரம் ஆகிய தூரங்களுக்கான போட்டி நடை பெற்றது. போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலிருந்து, நான்கு வழிச்சாலை வழியாக, தருமபுரி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வரை 5 கி. மீ. தூரமும், புலியூர் வரை 10 கி.மீ. தூரமும், மஞ்சமேடு தெண்பெண்ணை ஆறு வரை 21 கி.மீ. தூரத்திற்கும் போட்டியாளர்கள் பங்கேற்று ஓடினர். பள்ளி மாணவர்கள் முதல் பொது மக்கள் வரை பலர் இந்நிகழ்வில் ஆர்வதுடன் கலந்துக்கொண்டு ஓடினர். போட்டியாளர்களுக்கு ஆங்காங்கே குடிநீர், பழங்கள் கொடுக்கப்பட்டு உற்சாகப்படுத்தினர். போட்டியில் பங்கேற்று வந்த முதல் மூன்று போட்டியாளர்களுக்கு கோப்பை மற்றும் பண முடிப்புகள் வழங்கப்பட்டன. போட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதன் முறையாக போச்சம்பள்ளியில் இப்போட்டி நடைபெறுவதால், சாலையெங்கும் பொது மக்கள் ஆர்வத்துடன் மாராத்தான் போட்டியை கண்டு களித்தனர். பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சௌகான் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். திருப்பத்தூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் இப்போட்டி நடைபெற்றதால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.



