திண்டுக்கல், ஜனவரி 28
புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15 – வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மதுரை அகஸ் மாநில தலைவி அருட் சகோதரி டெய்சி ராணி மற்றும் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர்.கிளாரா தேன்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர். பெண் கல்வி என்பது மிகவும் இன்றிய மையாதது. பெண்கள் கட்டாயம் உயர்கல்வி பயின்றால் அந்த குடும்பமே கல்வி அறிவு பெற்ற குடும்பமாக திகழும். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவினை பெற்று கற்றல் திறனை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். ஏட்டு கல்வியுடன் நின்று விடாமல் விளையாட்டு துறையிலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் . துறை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளையும் மாணவிகள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை சிறப்புரையாக சிறப்பு விருந்தினர்கள் மாணவிகளுக்கு வழங்கினர். மேலும் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கினர். கல்லூரியின் செயலர் அருட் சகோதரி அருள் தேவி அவர்களும் கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மேரி பிரமிளா சாந்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். விழாவில் 595 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.