பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
நாகர்கோவில், மே 4:
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் 3088 அரசு உயர்நிலை பள்ளிகளும், 3174 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தி புதிய உத்திகளை கையாண்டு கற்பித்தல், செயல்வழி கற்றல், திறன் வகுப்பறைகளை பயன்படுத்தி கற்பித்தல் போன்ற வகுப்பறை செயல்பாடுகள் மூலம் தரமான கல்வி வழங்கி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 1364 அரசு பள்ளிகள் 10ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி வழங்கியுள்ளனர். இது போன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 387 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன்களை படிப்படியாக வளர்த்து அவர்களை கல்வி செயல்பாடுகள் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் நன்முறையில் ஈடுபடுத்துவதின் மூலம் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுகின்ற பள்ளிகளுக்கு அரசின் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள், மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிடும் வகையில் முதன்மை கல்வி அலுவலர்கள் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உடன் 100 சதவீத தேர்ச்சி பெரும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை பெற்று அதன் தொகுப்பறிக்கையை உரிய படிவத்தில் 10 தினங்களுக்குள் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


