ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகஸ்ட் 05 –
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலையில் 41வது பேட்ச் 2025-26 முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்க விழா வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர்கள் முனைவர் எஸ். சசி ஆனந்த், எஸ். அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வேந்தர் பேசுகையில், “உயர் படிப்பு, வேலைவாய்ப்பு, சுய தொழில் முனைவு, குடும்ப வணிகம், நான்கில் ஒன்றை குறித்து அந்த இலக்கை அடைய வேண்டும்.
அதற்கான வாய்ப்புகள் பல்கலையில் அதிகமாய் உள்ளன. அதனைப் பயன்படுத்தி நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்தால் பின்வரும் நாற்பது ஆண்டுகள் வாழ்க்கை வளமாக இருக்கும்” என்று அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து துணை தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் பேசுகையில், “கற்கும் போதே அதன் பயன்பாடும் அறிந்து கற்றதை பயன்படுத்தி புராஜக்ட்டில் ஈடுபடவேண்டும். மற்றொன்று பேச்சுத் திறமை இந்த இரண்டும் தான் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான தகுதிகள் என்று அறிவுரை வழங்கினார்.
துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன் வரவேற்புரை நிகழ்த்தினார். பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன் பல்கலை அனைத்து துறை அதிகாரிகளையும் அறிமுகப்படுத்தி பேசினார். முதலாம் ஆண்டு பொறியியல் துறை டீன் எம்.கல்பனா புத்தாக்கப் பயிற்சிகள் பற்றி விவரித்தார்.
பெங்களூர், மைக்ரோசாப்ட் நிறுவன ஏஎஸ்ஐசி பொறியாளர், சேக் அலிவுர் ரஹமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தற்போது தொழிற்சாலைகளில் அனைத்து பொறியில் படிப்பிலும் பன்முகத் திறமை கொண்டவர்களுக்கே முதலிடம் என்று கூறினார். மேலும் இந்தியாவில் வளர்ந்து வரும் செமி கண்டக்டர்ஸ், ஐஓடி ஆகியவற்றில் கவனமுடன் கற்று வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், பெற்றோர்கள், முதலாண்டு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பேராசிரியர் என். செல்வப்பழம் நன்றி கூறினார். புத்தாக்க பயிற்சி துவக்கவிழா குழு பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.