தருமபுரி, ஜூலை 12 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. சேலம் லீ பஜார் கமிஷன் மண்டியில் புளி விற்பனைக்கு அனுப்பப்பட்டு கமிஷன் 6 சதவீதம் மற்றும் வாடகை சேர்த்து 8.5 சதவீதம் செலவு ஆகிறது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியை தலைமையிடமாய் கொண்டு ஒருங்கிணைந்த புளி வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகளால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் மாவட்ட புளி வணிக மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மஞ்சளுக்கு ஈரோடு என்பதை போல் தருமபுரிக்கு புளி என்ற நிலையை உருவாக்கி தருமபுரி மாவட்டத்தை தொழில் மாவட்டமாக உருவாக்க விவசாயிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆட்சியர் கூறினார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர் இளங்கோவன், ஒழுங்கும் முறை விற்பனை குழு செயலாளர் அருள் மணி, உதவி இயக்குநர் கங்கா, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் தெய்வமணி, புளி வணிக மாவட்ட தலைவர் பச்சமுத்து பாஸ்கர், செயலாளர் வினோ பாஜி, புளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி, வேளாண்மை அலுவலர்கள் சிவசக்தி, சத்ய நாராயணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.