வேலூர், ஆகஸ்ட் 14 –
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நவீன மருத்துவ சாதனங்கள் கொண்டு கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத்தார். இதில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சம்மந்தமாக புகழ் பெற்ற ‘எல் கியூப்’ (LCUBE) மருத்துவ குழுவுடன் நறுவீ மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மற்றும் ‘எல் கியூப்’ நிறுவனத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். கல்லீரல் சிகிச்சைக்காக நோயாளிகள் பல்வேறு நகரங்களுக்கு செல்வதை தவிர்த்து இம்மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை பெறுவதற்கு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
இம்மருத்துவமனையின் மற்றொரு மைல்கல்லாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் பல ஆயிரம் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து சிறந்து விளங்கும் ‘எல் கியூப்’ (L CUBE) என்ற மருத்துவ குழுவுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜாய் வர்கீஸ் மற்றும் டாக்டர் விவேக் விஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் இம்மருத்துவமனையில் முகாமிட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் சிகிச்சை அளிக்க உள்ளனர். இந்த மருத்துவ குழுவினர் ஒரே நாளில் நான்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகை தந்து சிறப்பான மருத்துவ சிகிச்சை பெற்று நலமுடன் திரும்புகின்றனர். உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இம்மருத்துவமனைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. அதன் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இம்மருத்துவமனையில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத். செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி. மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ். தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் ராமன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.



