குளச்சல், ஜூலை 24 –
வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பின்புறம் நேற்று முன்தினம் மதியம் மனித எலும்பு கூடு கிடப்பதாக வெள்ளிசந்தை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் மற்றும் நீண்டகரை பி வில்லேஜ் கிராம நிர்வாக அதிகாரி ரமணி உள்ளிட்ட அலுவலர்களும் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது இந்த எலும்புக்கூடு ஆணா பெண்ணா? என கண்டுபிடிக்க முடியாத வகையில் காணப்பட்து. இறந்து பல ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
பின்னர் எலும்புக்கூடு மீட்கப்பட்டு பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எலும்பு கூடு கிடந்த இடத்தில் ஏற்கனவே உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அவ்வாறு புதைக்கப்பட்ட உடல் தற்போது மழையில் மண்ணரிப்பு ஏற்பட்டு வெளியே வந்திருக்கும் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது. இருப்பினும் மருத்துவ சோதனைக்கு பிறகு இறந்தது ஆணா? பெண்ணா? என்பது தெரிய வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.