விழுப்புரம், ஜூலை 11 –
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தொனிப்பொருளில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் மாபெரும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1700 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பல்கலைக்கழகம், 67 அரசு கலைக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்த அனைத்து திட்டங்களும் முடங்கிக்கொண்டு விட்டன, என்று சாடினார்.
மேலும் “அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாத நிலை, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றுகிறது. விழுப்புரம் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடநெறிகள் வழங்கப்படாவிட்டால் சி.வி. சண்முகம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடக்கும்” என எச்சரிக்கை விடுத்தார்.
திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் வாக்குகளைப் பெற்றவைகளை மதிக்காத ஆட்சி, வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மூலம் மக்களை சுரண்டி வருகிறார்கள். அரிசி, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் சிரமப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் குறைந்துள்ளதே இதற்கு சான்று” என்றார்.
அதிமுக ஆட்சி காலத்தில்தான் சிறுபான்மை மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் ஹஜ் பயண நிதி போன்ற விசயங்களில் கூட அதிமுக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார். “மதுரையில் ரூ.200 கோடி வரிப்பணம் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வகை தவறுகளை மக்கள் மறக்கக்கூடாது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு எதிர்வரும் 2026 தேர்தலில் ஆதரவு அளிக்கலாம் எனவும், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.