விளாத்திகுளம், செப்டம்பர் 06 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், திருநீர், மஞ்சள், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சந்திரசேகரர் உமாபதி தாயார் ரிஷப வாகனத்தில் பிரதோஷ காலத்தில் பிரத்தக்ஷ்னமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ரோஜா, மல்லிகை, செவ்வரளி, மரிக்கொழுந்து, விரலி மஞ்சள் பல்வேறு வண்ணமலர்களால் மாலை அணிவிக்கப்பட்ட நந்தி பகவான் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிவ நாமம் பாடி மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.



