மார்த்தாண்டம், ஏப். 6 –
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் 3 முறை எம்எல்ஏ வாக இருந்து, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி. அவருக்கு இந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மார்த்தாண்டம் பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக நான் அந்த கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஐனதா கட்சியில் சேர்ந்த 2 ஆண்டுகள் எந்த பொறுப்பும் இல்லாமல் காத்திருந்தேன். இதை தொடர்ந்து தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு வாய்ப்பளித்த பிரதமர் மற்றும் பாரதியா ஐனதா கட்சியின் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் ஏற்கனவே நான் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கட்சி மாறியது சரிதான் என கூறினார்கள். என்னை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு என ஒரு அங்கீகாரத்தை தர நாங்கள் உறுதியளிக்கிறோம் என கூறுகிறார்கள். இதை என்னால் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது.
நான் தொகுதி மக்களுக்கு புதியவள் அல்ல. என்னை ஜாதி மத கண்களுக்கு அப்பாற்பட்ட மக்கள் பணியாளராக 13 ஆண்டு காலம் பணி செய்ததை அவர்கள் நினைவு கூருகிறார்கள். இந்த நீண்ட பயணத்தில் என்னை போட்டியிட வைப்பது விளவங்கோடு தொகுதி மக்கள் தான். அவர்களின் ஆசைக்காக தான் நான் இங்கு சீட்டை கேட்டு பெற்றேன். கட்சியும் அதை அங்கீகரித்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் என்னை எதிர்த்து போட்டியிடும் நபர் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நபர். அவருக்கு காங்கிரஸ் கட்சியினரே எதிராக உள்ளனர். அந்த வேட்பாளர் தொடர்பாக ஏராளம் புகார்கள் உள்ளன. நான் அதை கூற முடியாது. பிரச்சாரத்தில் நான் செய்த நல்லவற்றையும் என்னை எதிர்த்து நின்று போட்டியிடுகின்றவர்களின் தீயவற்றையும் தெரிவிப்போம் என கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஆர்.டி.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



