மார்த்தாண்டம், செப். 9 –
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு செய்ய அதிகாரிகள் வருகை தந்தனர். தொடர் கதையாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி நிறுத்தப்பட்டது.
மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம் சம்பந்தமாக 10 வருடமாக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய பாதையின் மேல் மேம்பாலம் அமைக்காமல் மாற்றுப் பாதையில் மேம்பாலம் அமைக்க அரசாணை பிறப்பித்துள்ளதை எதிர்த்து ஊர் பொதுமக்களும் அனைத்து கட்சிகள் சார்பிலும் அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் அரசு மாற்று பாதையில் மேம்பாலம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.இதற்கான நில அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை வந்தும் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பலமுறை தடுத்து நிறுத்தியும் சோர்ந்து போகாத அரசு அதிகாரிகள் இன்று மீண்டும் நில அளவீடு செய்வதற்காக வந்தனர். அப்போது தகவல் அறிந்த உண்ணாமலை கடை டவுன் பஞ். தலைவி பமலா தலைமையில் ஊர் பொது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் வாக்குவாதம் நடைபெற்றது. புல தணிக்கை சிறப்பு தாசில்தார் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் சார்பில் மேம்பாலம் சம்பந்தமாக அனைத்து தகவல்களையும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளோம்.
மாவட்ட கலெக்டர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளனர். அவர்களிடம் இருந்து பதில் வரும் வரை நில அளவீடு செய்யக்கூடாது என்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு விளவங்கோடு வருவாய் ஆய்வாளர் சீதாலட்சுமி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். அதன் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளும் திரும்ப சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



