தருமபுரி, ஜூலை 13 –
வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பூ குவோக் (Phu Quoc) அருகே ஏற்பட்ட அதிவேகப் படகு விபத்து இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் என மொத்தம் 36 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 13 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு 21 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட கடத்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெ. செந்தில்குமார் உயிரிழந்தது மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த செந்தில்குமாருக்கு பூவிழி (40) என்ற மனைவியும், 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சுற்றுலா பயணமாக வெளிநாடு சென்ற நிலையில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம், செந்தில்குமாரின் குடும்பத்தினரையும், உறவினர்களையும், நண்பர்களையும் மட்டுமின்றி, கடத்தூர் பகுதி மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.



