வாடிப்பட்டி, ஜூன் 12 –
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார்கள் ரகுபதி புவனேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரைச் செல்வி, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் செந்தில் குமார், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில்,
வாடிப்பட்டி பகுதியில் பருவ மழையை எதிர்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வறண்ட கண்மாய்களை ஆழப்படுத்தி கரைகளை சீரமைக்க வேண்டும். கண்மாயில் இருந்து வெளிவரும் வரத்துகால்வாய் மற்றும் வெளியேறும் வாய்க் கால்களை சீரமைக்க வேண்டும். வாடிப்பட்டி பேரூராட்சி எரியட்டும் மயானம் எதிரில் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். தெத்தூர் பகுதியில் மலையோர விவசாய நிலங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து வரும் அரசு பஸ்கள் வாடிப்பட்டி பஸ் நிலையத்தைப் புறக்கணித்து விட்டு புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் அதிகாரிகள் வராததால், அதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பிற துறை அதிகாரிகளைக் கட்டாயம் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை என்றால் விவசாயக் கூட்டத்தை புறக்கணிப்பு செய்யப் போவதாக காரசார விவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில், நீர்ப் பாசன ஆய்வாளர் முகமது சுல்தான், மற்றும் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.