மயிலாடுதுறை, ஜூலை 1 –
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர். அவர்களது செருக்கை அடக்க சிவபெருமான் மற்றும் விஷ்ணு இணைந்து நடத்திய திருவிளையாடலின் போது சிவனை அழிக்க பல்வேறு மிருகங்களை யாகம் மூலம் தோற்றுவித்து தாருகாவனத்து முனிவர்கள் ஏவினர்.
இதில் முக்கியமாக யானையை உரித்து சிவபெருமான் நடனமாடி ஆடையாக அணிந்து கொண்டார். அந்த இடம் அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூர் என்று அழைக்கப்படுகிறது. அந்த முனிவர்கள் வசித்த புகழ்பெற்ற தாருகா வனத்தில் 54 அடி உயரத்தில் புதிதாக சிவாலயம் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. தாருகா வனத்து சித்தர் பீடம் என்று அழைக்கப்படும் இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா வரும் ஏழாம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று விக்னேஸ்வர பூஜை உடன் பூர்வாங்க பூஜைகள் துவங்கின. இதில் ரஷ்யா, கஜகஸ்தான், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். நாளை முதல் காலையாக சாலை பூஜைகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.