தென்காசி, அக். 27 –
தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு சொர்ணபுரம் பள்ளிவாசல் வளாகத்தில் ரேஷன்கடை (கடை எண் : DL005PN , கொடிமரம் ll) செயல்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கடையில் 1800 க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. அதிகமான கார்டுகள் உள்ளதால் பொதுமக்களுக்கு அரசு வழங்கக்கூடிய ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. மேலும் குறித்த நேரத்தில் கடை திறக்கப்படாததாலும் ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்காததாலும் தொடர்ந்து பொதுமக்கள் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். இது சம்மந்தமாக துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே நுகர்வோர் நலன்கருதி மேற்கண்ட நியாயவிலைக்கடையை இரண்டாக பிரித்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்க நடவடிக்கை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது மஹ்மூத் தலைமையில் கிளை தலைவர் முகம்மது அசன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், தொகுதி தலைவர் பீர்முகம்மது, நகர செயலாளர் ஷேக் மைதீன், நகர இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன், நகர பொருளாளர் அகமது கபீர், கிளை நிர்வாகிகள் சுல்தான், ரஹ்மத்துல்லா மற்றும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



