ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கக் கோரி போராட்டம்; 9 கோட்டங்களிலும் பணி புறக்கணிப்பு
நாகர்கோவில், செப். 11-
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தின் கீரிப்பாறை கோட்டத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வேலைக்கு சென்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படாது, நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் பணி வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கும் பணி வழங்கக் கோரி முறையிட்டனர். ஆனால் கோரிக்கை ஏற்கப்படாததால், அவர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கீரிப்பாறை கோட்டத்தை சேர்ந்த ரப்பர் கழக தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் கீரிப்பாறையில் உள்ள கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கீரிப்பாறை தொழிலாளர்களுக்கு ஆதரவாக, ரப்பர் கழகத்தின் மற்ற 8 கோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.



