வேலூர், ஜூலை 08 –
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட முள்ளிப்பாளையம் கே.கே நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்குவதில்லை, தெரு விளக்குகளும் எரிவதில்லை, கழிவுநீர் கால்வாய்களும் அமைக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன் கழிவு நீர் வீடுகளின் வெளியே நிற்பதால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கே.கே நகர் பகுதி மக்கள் சாலைகளின் நடுவே மாட்டு வண்டிகளை நிறுத்தி குடிநீர் கேட்டும் அடிப்படை வசதிகளை செய்து தர கோரியும் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பின்னர், ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வேலூர் வட்டாட்சியர் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து முள்ளிப்பாளையம் பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.