வேலூர், ஆகஸ்ட் 26 –
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெருமாள்குப்பம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இப்பகுதியில் 20 குடும்பங்கள் உள்ள பகுதிக்கு முறையான சாலை இல்லாததால் அப்பகுதியில் வசித்து வருபவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளுக்கு செல்லும் வழியில் சாலை அமைப்பதற்காக தற்போது கரடு முரடான கற்கள் கொட்டப்பட்டுள்ளது. அதனை சீரமைத்து சாலை அமைக்க பணிகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற உள்ள நிலையில் சாலை அமைக்கும் இடம் தங்களுக்கு சொந்தம் என ராமதாஸ், முனுசாமி, சீனிவாசன் மற்றும் குமார் ஆகியோர் பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினரை மிரட்டி பணிகளைத் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் சாலை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்த அப்பகுதி பொதுமக்களை இவர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்களுடைய விவசாய நிலங்களுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும் என்பதால் அறுவடை இயந்திரங்கள் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் மிகவும் மன வேதனையுடன் உள்ளனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு சாலையை அமைத்து தர வேண்டும் இல்லை என்றால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.



